கஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது சேமிப்பை வழங்கிய அரசுப் பள்ளி ஏழைக் குழந்தைகள் - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Tuesday 27 November 2018

கஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது சேமிப்பை வழங்கிய அரசுப் பள்ளி ஏழைக் குழந்தைகள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது பங்களிப்பாக, தாங்கள் சேமிப்பினை வழங்கியுள்ளார்கள். மேலும் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான தரமான நோட்டுகள் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாணவ மாணவியருக்காக பள்ளி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.




இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ், கஜா புயால் டெல்டா மாவட்ட மக்கள் அடைந்துள்ள துயர்களையும், பாதிப்புகளையும் மாணவர்களிடம் விளக்கியுள்ளார். மேலும் இருப்பதிலிருந்து இல்லாவதவர்களுக்கு, தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கூறியுள்ளார். 




இதனையடுத்து 5 ம் வகுப்பு மாணவிகள் மா.வேல்மயில், அ.கனிதா, கோ.காளிதீபிகா ஆகியோர் தாங்கள் அடுத்த கல்வியாண்டு 6 ம் வகுப்பு போகும் போது, தேவையான கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்காக பணம் சேர்த்து வைத்திருந்த தங்களது உண்டியல்களை கொண்டு வந்தனர். ஏனைய மாணவ மாணவியர் தாங்கள் இரு நாட்கள் பெற்றோர் வாங்கி சாப்பிட கொடுக்கும் பணத்தை சேர்த்து வைத்து செவ்வாய்கிழமை பள்ளிக்கு கொண்டு வந்தனர்.  ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி, வட்டாரக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் ஆகியோரிடம் இந்த உண்டியல்கள் மற்றும் காசுகளை மாணவ மாணவியர் வழங்கினர். இவை மொத்தம் ரூ.1800 சேர்ந்துள்ளது. இதனை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்தார்.


மேலும் தலைமை ஆசிரியர் இது குறித்து கூறுகையில், கடந்த ஆகஸ்டு மாதம் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பிற்கு இக் குழந்தைகள் கொடுத்த பணம் ரூ.1584 உடன், தலைமை ஆசிரியர் பங்களிப்பு ரூ.3 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.3584 த்தை கேரளா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தோம்.



கடந்த 13 ஆண்டுகளாக ஆண்டிற்கு சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் மாணவர்கள் எழுதுவதற்கு பயன்படும் நோட்டுகள் போல உள்ள தரமிக்க டைரிகள் நண்பர்கள் மூலம் இலவசமாக வரும். இதனை இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் தேவையில் உள்ள மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறேன்.



தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மாணவ மாணவியரின் பயன்பாட்டிற்கு ரூ.1.10 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த டைரிகள் 2 ஆயிரம் எண்ணிக்கையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.


மாணவர்களையும், அவர்களை நல்வழிபடுத்தி நாட்டிற்கு சிறந்த பிரஜைகளாக உருவாக்க முயன்றுவரும் தலைமை ஆசிரியரை அரசு அதிகாரிகள் பாராட்டினர்.


நிகழ்ச்சியில் ஆசிரியை கா.ரோஸ்லினா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கா.மாரீஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி பொ.காளீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment