`ப்ளஸ் 2 முடித்தாலே வேலை என்ற நிலை உருவாக்கப்படும்!' - அமைச்சர் செங்கோட்டையன் - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Sunday 11 November 2018

`ப்ளஸ் 2 முடித்தாலே வேலை என்ற நிலை உருவாக்கப்படும்!' - அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்-2 முடித்த உடனே வேலைக் கிடைக்கும் வகையில் ஸ்கில் டிரெய்னிங் என்ற புதிய பாடத்திட்டம் இணைக்கப்படும்' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.




வேலூர் மாவட்டத்தில் சென்ற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ப்ளஸ்-2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 59 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு 'விருது' வழங்கினார்.




அப்போது பேசிய அமைச்சர், ``ஆசிரியர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் இருக்கிறது. கையில் குச்சி இருந்தாலேபோதும் ஆசிரியர்களின் நிலை அவ்வளவுதான். பெற்றோர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தைகள் இருப்பதில்லை. இவற்றைத் தடுக்க 'பயோ மெட்ரிக்' திட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம். சரியான நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா?. சரியான நேரத்தில் வீட்டுக்குத் திரும்புகிறார்களா என்பது குறித்து பெற்றோர்களின் செல்போனுக்கு 'குறுஞ்செய்தி' அனுப்பப்படும். இதுவரை 500 பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' கொண்டுவரப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் ஆயிரம் பள்ளிகளில் வைக்கப்படும். மாணவர்களிடம் விஞ்ஞான வளர்ச்சியை உருவாக்குவதற்கு ஒரு பள்ளிக்கு ரூ.20 லட்சம் என்ற முறையில் 671 பள்ளிகளில் 'அறிவியல் லேப்' அமைக்கும் பணிகள் டிசம்பருக்குள் நிறைவேற்றப்படும்.



'நீட்' தேர்வு பயிற்சிக்கு 413 மையங்களில் 26 ஆயிரம் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். மார்ச் மாதத்திற்குப் பிறகு ப்ளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் உடனடியாக சி.ஏ. எழுதப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 500 ஆடிட்டர்கள் தயார் செய்திருக்கிறோம். இலவசமாக அவர்கள் மாணவர்களுக்கு சி.ஏ. பயிற்சியைக் கற்றுத்தருவார்கள்.




நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் ஜனவரியில் அமல்படுத்தப்படும். சுதந்திர தினவிழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆண்டு விழாக்களுக்குப் பெற்றோர்களை அழைப்பதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரோட்டரி கிளப் மூலமாகப் பள்ளிகளில் கழிப்பிடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள ஏப்ரல் இறுதிக்குள் வாகனங்கள் வழங்கப்படும். 20 பள்ளிகளுக்கு ஒரு வாகனம் மூலம் கழிப்பிடம் சுத்தம் செய்யப்படும்.


3 ஆயிரம் பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' டிசம்பர் இறுதிக்குள் உருவாக்கப்படும். 9 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் 'கம்ப்யூட்டர்' மயமாக்கப்பட்டு 'இன்டெர்நெட்' வசதி இணைக்கப்படும். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் வீட்டிற்குச் சென்ற பிறகு செல்போனில் டவுன்லோட் செய்தும் படிக்கலாம். அதுமட்டுமில்லாமல், ப்ளஸ்-2 முடித்தாலே அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் தருகிற 'ஸ்கில்' டிரெய்னிங் புதிய பாடத்திட்டம் இணைக்கப்படும். இதன் மூலம் ப்ளஸ்-2 முடித்த உடனடியாக வேலைக் கிடைக்கும் என்ற நிலையைத் தமிழக அரசு உருவாக்கிக் காட்டும்'' என்றார்.



விழாவில் அமைச்சர் நிலோஃபர் கபீல், கலெக்டர் ராமன், வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, லோகநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, வாணியம்பாடியில் இந்து மேல்நிலைப்பள்ளி 'நூற்றாண்டு விழா' கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் நிலோஃபர் கபீல் கலந்துகொண்டு 'நூற்றாண்டு விழா' நுழைவு வாயிலைத் திறந்துவைத்தனர்.

No comments:

Post a Comment