மாடு பூட்டி, மரச்செக்கில் கரும்பு ஜூஸ் வியாபாரம்!'- 75வயது முதியவரின் மாஸ் ஐடியா - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday 17 November 2018

மாடு பூட்டி, மரச்செக்கில் கரும்பு ஜூஸ் வியாபாரம்!'- 75வயது முதியவரின் மாஸ் ஐடியா

இயற்கையை நாம் எந்த அளவிற்கு சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கண்கூட பார்த்ததாலோ என்னவோ, இன்றைய தலைமுறைக்கு இயற்கையின் மீதும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை மீது பெரிதளவில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. சிறுதானிய வகைகளையும், தமிழர்களின் பாரம்பர்ய உணவுப் பொருள்களையும் நோக்கி ஃபாஸ்ஃபுட் தலைமுறையினர் பயணப்பட ஆரம்பித்திருக்கின்றனர். அதற்கேற்றவாறு மரச்செக்கு எண்ணெய், நாட்டுச் சர்க்கரை, சிறுதானிய வகைகள் என மார்க்கெட்டிலும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு செம கிராக்கி ஏற்பட்டிருக்கின்றன. அந்த வகையில், இயற்கை முறையில் மரச்செக்கின் மூலமாகக் கரும்பை அரைத்து கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து அசத்தி வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த 75 வயது முதியவர். இவரின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.





பாட்டில்களிலும், டின்களிலும் அடைத்து வைக்கப்பட்ட குளிர்பானங்களைக் குடித்து வந்தவர்கள், தற்போது இளநீர், கரும்பு ஜூஸ், பழச்சாறுகள் பக்கமாகத் திரும்பியிருக்கிறார்கள். பல இடங்களில் கரும்பு ஜூஸ் மெஷின்கள், கரும்பை அரைத்துத் தள்ளிய வண்ணம் இருக்கின்றன. குறைந்த விலைக்குக் கரும்பு ஜூஸ் கிடைக்கிறது என்பதால், கடைகளுக்கு முன்பு மக்கள் ஈயாய் மொய்க்கிறார்கள். குறைந்த விலையில் கிடைக்கும் இந்தக் கரும்பு ஜூஸையும், இயற்கை முறையில் கொடுத்தால் என்ன?... என யோசித்து பட்டையைக் கிளப்பி வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த 75 வயதான சுப்பிரமணி என்பவர்.
ஈரோட்டிலிருந்து கோவைக்கு செல்லும் சாலை அது. எறும்புக்கூட்டம் மாதிரி எப்போதுமே வாகனங்கள் வரிசை கட்டி மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும். சரியாகப் பெருந்துறைரோடு, தங்கம் நகர் அருகே 'சுத்தமான மரச்செக்கு கரும்பு ஜூஸ்' என்ற போர்டு நம் கண்ணில்பட்டது. வண்டியை ஓரம்கட்டி இரண்டு கிளாஸ் கரும்பு ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு பெரிவர் சுப்பிரமணியிடம் பேச்சு கொடுத்தோம். மாட்டினை மரச்செக்கில் பூட்டிவிட்டு, கரும்பைப் பிழிந்துகொண்டே நம்மிடம் பேச ஆரம்பித்தார். "ஈரோடு பெரியார் நகரில் தான் நான் இருக்கிறேன். பெரியார் நகர் ஆர்ச் பக்கத்தில் என் பையன் 17 வருஷமா கரும்பு ஜூஸ் கடை வச்சிருக்கான். அவனுக்கு ஒத்தாசையா நான் கடையில வேலை செஞ்சிக்கிட்டு வந்தேன்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னோட பையன் சீரடிக்கு டூர் போய்ட்டு வந்தான். அங்க மரச்செக்கு மூலமாகக் கரும்பை ஆட்டி ஜூஸ் எடுத்து வியாபாரம் பண்றாங்கன்னு சொன்னான். அதைக்கேட்ட உடனே, எனக்கும் அதேமாதிரி செய்யணும்னு ஆசை வந்துச்சி. பையன்கிட்ட என்னோட ஆசையைச் சொன்னேன். அவனும் சரின்னு சொல்ல, சீரடிக்கே போய் அந்த வாகை மரத்தால் செய்யப்பட்ட மரச்செக்கை வாங்கிட்டு வந்தோம். சிட்டிக்குள்ள கடை போடலாம்னா வாடகை அதிகமா இருந்துச்சி. மக்களும் இதை விரும்பி குடிப்பாங்களான்னு கொஞ்சம் சந்தேகமும் இருந்துச்சி. அதனால ஈரோடு - பெருந்துறை ரோட்டுல தங்கம் நகர்ல குறைஞ்ச வாடகைக்கு இடம் இருக்குன்னு சொல்ல, இங்க கடை போட்டோம். நாங்களே எதிர்பார்க்கலை நிறையப் பேர் காரை நிப்பாட்டி வந்து குடிச்சிட்டு போறாங்க" என்றார்.
தொடர்ந்தவர், "கரும்பு மெஷின் போட்டாலும் இதே செலவு தான் ஆகும். மெஷின்ல கரும்பு அரைச்சா, அந்த ஜூஸ்ல கொஞ்சம் இரும்பு வாடை அடிக்கும். ஆனா, மரச்செக்கு மூலமாகக் கரும்பை அரைச்சு, நசுக்கி அதுல இருந்து கிடைக்கிற ஜூஸ் நல்லா சுவையாக இருக்கும். வியாபாரம் கம்மியா இருந்தாலும், காரை நிப்பாட்டி வந்து கரும்பு ஜூஸ் சாப்பிடுறவங்க, 'சுத்தமாவும், தரமாகவும் இருக்குன்னு' சொல்றப்ப மனசுக்கு சந்தோஷமா இருக்கு" என்று சொல்லியபடி இரண்டு கிளாஸில் கரும்பு ஜூஸை ஊற்றிக் கொடுத்தார். வீடு வந்து சேரும் வரை நாக்கிலேயே இருந்தது கரும்புச்சாற்றின் சுவை. எதிலெல்லாம் கலப்படம் செய்யலாம் என கணக்கு போடுபவர்களுக்கு மத்தியில், வாங்கும் பணத்திற்கு தரமான பொருட்களை கொடுக்க வேண்டும் என நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

No comments:

Post a Comment