ஒரு கேபின் கட்டணம் 3,00,000 ரூபாய்... டெக்கான் ஒடிஸி பிரமிக்க வைப்பது எதனால்?! - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Monday 3 December 2018

ஒரு கேபின் கட்டணம் 3,00,000 ரூபாய்... டெக்கான் ஒடிஸி பிரமிக்க வைப்பது எதனால்?!

சாமான்ய இந்திய மக்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகள் அழுக்குப் படிந்துதான் கிடக்கும். கிழிந்து போன இருக்கைகள், உடைந்து போன கண்ணாடிகள், சுகாதாரமில்லாத கழிவறைகள் இவைதாம் இந்திய ரயில்வேயின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. 






இதையெல்லாம் தாண்டி இந்திய ரயில்வேக்கு ஒரு பெருமை உள்ளது. ஆசியாவிலேயே மிகச்சிறந்த ஆடம்பர ரயில் நமது இந்திய ரயில்வேயிடம்தான் உள்ளது. அதன் பெயர் டெக்கான் ஒடிஸி. பெயரைப் போலவே டெக்கான் ஒடிஸி அழகு மிகுந்த ரயில். ஆசிய அளவில் மிகச்சிறந்த விமான சேவை வழங்கும் நிறுவனங்களில் நிச்சயமாக ஏர் இந்தியாவுக்கு இடம் இருக்காது. ஆனால், டெக்கான் ஒடிஸி ஆசியாவிலேயே மிகச்சிறந்த ரயில் என்கிற விருதைத் தொடர்ந்து 5- வது முறையாகத் தட்டிச் சென்றுள்ளது. உலக அளவில் கௌரவமிக்க டிராவல் விருது இது.



டெக்கான் ஒடிஸியில் ஒருமுறைப் பயணித்தால் வாழ்நாளுக்கும் மறக்க மாட்டீர்கள். `ஹிட்டன் ட்ரஸ்ஸர்ஸ் ஆஃப் குஜராத்' என்ற பெயரில் டெக்கான் ஒடிஸி ரயில் ஓடுகிறது. மும்பை, வதோரா, பலிடானா, சசினா கிர், கட்ச், மாதேரா, பதன், நாசிக் வழியாக மும்பை திரும்புவது இந்த ரயிலின் வழித்தடம். `இண்டியன் ஒடிஸி' ரயில் டெல்லியிலிருந்து புறப்பட்டு சவால், மதுபூர், ஆக்ரா, ஜெய்ப்பூர், உதய்பூர், வதோரா, எல்லோரா கேவ்ஸ், வழியாக மும்பை அடைகிறது. `இந்தியன் சஜார்ன்' ரயில் மும்பையிலிருந்து வதோரோ, உதய்பூர், ஜோத்பூர், சாவல், மதோபூர், ஆக்ரா, ஜெய்பூர், டெல்லி செல்கிறது.. `ஜுவல்ஸ் ஆஃப் டெக்கான்' - மும்பை, பிஜப்பூர், பட்டர்க்கடை, ஹம்பி, ஹைதராபாத், எல்லோரா கேவ்ஸ், அஜந்தா கேவ்ஸ் வழியாக மும்பை அடைகிறது.



`மகாராஸ்ட்ரா ஸ்ப்லென்டர்' ரயில் மும்பையிலிருந்து புறப்பட்டு வதோரா, ஜோத்பூர், சாவல், மதோபூர், ஆக்ரா, ஜெய்ப்பூர், டெல்லியை அடையும். `மகாராஸ்ட்ரா வைல்ட் ட்ரையல்' மும்பையிலிருந்து அவுரங்கபாத், ரம்தெக், தடோபா, அஜந்தா கேவ்ஸ், நாசிக் வழியாக மீண்டும் மும்பையை அடையும். இப்படி 6 மார்க்கங்களில் டெக்கான் ஒடிஸி ரயில் இயக்கப்படுகிறது. இவை அனைத்துமே 8 நாள்கள் 7 இரவுகள் பயணத் திட்டம் கொண்டவை.
உண்மையிலேயே ரயில் பயணத்தை விரும்புபவர்களுக்கு டெக்கான் ஒடிஸி ரயில் ஒரு வரப்பிரசாதம். டெக்கான் ஒடிஸி ரயிலில் 12 கோச்சுகள் இணைக்கப்பட்டுள்ளன. அறைகளில் படுக்கை, மேஜை, டெலிபோன் வசதி, குளிர்சாதன வசதி, டிவி, வைஃபை நவீனக் குளியல் அறை, என ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை விஞ்சும் வகையில் வசதிகள் உள்ளன. 24 மணி நேரமும் ரூம் சர்வீஸ் உண்டு. சுற்றுலாப் பயணிகளின் மனதுக்கு இதமளிக்கும் வகையில் இடங்களைச் சுற்றிப் பாக்கலாம்.



அதே வேளையில், ரயிலின் ரெஸ்டாரன்ட்டுகள் வயிற்றுக்கு வித விதமாகச் சைவ, அசைவ உணவுகளைச் சமைத்துப் பரிமாறுகின்றன.. மகாராஸ்ட்ரா மாநில உணவு வகைகள், பொதுவான இந்திய உணவு வகைகளைத் தயாரித்து வழங்க இரு ரெஸ்டாரன்ட்கள் உள்ளன. இதுதவிர, Continental cuisine, oriental cuisine ரெஸ்டாரன்ட்டுகளும் இருக்கின்றன. ரயில் நிற்கும் இடங்களின் பாரம்பார்ய உணவுகளும் தயாரித்து வழங்கப்படுகின்றன. அசைவ பிரியர்களுக்காக ஆங்காங்கே ரயில் நிற்கும் இடங்களிலேயே சிக்கன், மட்டன், மீன் வகைகள் பிரஷ்ஷாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளப்படுகிறது. நாம் விரும்பும் உணவுகளைக் கேட்டாலும் ருசியாகவும் சுடச்சுடவும் சமைத்துத் தருகிறார்கள். தினமும் காலையில் நம் அறைக்கே காபி, டீ வந்து விடும். தினசரிகளும் தந்து விடுகிறார்கள்.
ரயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுவகைகள் வழங்கப்படுகின்றன. கண்டிப்பாக 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் மது பரிமாறப்படும். `ஸ்பா' வசதி உள்ளது. சுற்றுப் பயணத்தின்போதே அலுவலகப் பணிகள் பார்க்க வேண்டியது இருந்தால் அதற்காக கான்ஃபரன்ஸ் ஹால் வசதியும் உள்ளது. டெக்கான் ஒடிஸி ரயிலை திருமண நிகழ்ச்சிக்கும் புக் செய்யலாம். ஆனால், திருமணத்துக்காக புக் செய்தால் முன்னரே தகவல் தெரிவித்து விட வேண்டும். அப்போதுதான் ரயிலில் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இந்த ரயிலின் எந்தப் பகுதியிலும் புகைக்க மட்டும் அனுமதி கிடையாது. சிகரெட் ரகங்களுக்கு ஸ்ட்ரிக்ட் தடை விதிக்கப்பட்டுள்ளது.




டெக்கான் ஒடிஸியில் பயணிக்க வேண்டுமென்றால் ஒரு கேபினுக்கான கட்டணம் 3,00,000 ரூபாய். என்ன தலை சுற்றுகிறதா... ஏனென்றால் இது சாமானியர்களுக்கான ரயில் இல்லை!

No comments:

Post a Comment